திருச்சி மத்திய பஸ் நிலைய பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மண்டபத்தை சுற்றி புதர் மண்டி கிடக்கிறது. மேலும், இந்த மணிமண்டபத்திற்கு அருகே டாஸ்மாக் மதுபான கடை செயல்படுவதால் மது பிரியர்கள் உள்ளே புகுந்து மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.
இந்தநிலையில், இந்த மணி மண்டபத்தை நாங்கள் சுத்தம் செய்கிறோம் என்று கூறி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் தமிழர் தேசம் கட்சியினர் இன்று ( 08.12.2023 ) ஒன்று கூடினர். பின்னர், கட்சியின் மாநில செயலாளர்
மகேஸ்வரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், கொள்கை பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மணி மண்டபத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் டிராக்டர் மூலம் முத்தரையர் மணி மண்டப வளாகத்தை அவசர, அவசரமாக சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடம்,
மாநகராட்சி நிர்வாகமே மணிமண்டப வளாகத்தை சுத்தம் செய்து விட்டது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என கேட்டுக்கொண்டனர்.
அதன்பேரில், மணிமண்டபம் முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உள்பட 3 தலைவர்களின் மணிமண்டபங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிமண்டபத்தை உடனடியாக திறக்காவிட்டால் தமிழர் தேசம் கட்சி சார்பில் திறக்கப்படும் என அறிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.