Rock Fort Times
Online News

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை…!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக சீமான், வருண் குமார் இருவரும் நீதிமன்றத்தில் இன்று(15-05-2025) ஆஜராக வேண்டும் என நீதிபதி விஜயா
உத்தரவிட்டிருந்தார். அதன்படி, டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அதனால் சீமான் ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என அவரது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். அதற்கான மனுவையும் அளித்தனர். ஆனால், மனுவை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, இதேபோல ஏற்கனவே ஒரு முறை சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இரண்டாவது முறையாக அவர் ஆஜராகவில்லை . இது அவருக்கு கடைசி வாய்ப்பு என எச்சரித்த நீதிபதி அவர் தரப்பு விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். டிஐஜி வருண்குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் வாதாடுகையில், பாதிக்கப்பட்ட வருண்குமார்
அரசு பணியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை சாதிய ரீதியாகவும், அவமதிக்கும் வகையிலும் சீமான் பேசி உள்ளார். அதற்கு விளக்கம் கேட்டு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். பின்னர் இந்த வழக்கை மே 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்ததோடு அன்றைய தினம் கண்டிப்பாக சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்