தமிழக காவல் துறை சட்டம் -ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால், வருகிற 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இவருடன், தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார். இவர்களுக்கான பிரிவு உபசார விழா நாளை மாலை 4 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ளதால், புதிய சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியல், டி.ஜி.பி., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. முதல் மூன்று இடங்களில், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.,யாக உள்ள சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரியாக உள்ள டி.ஜி.பி., ராஜீவ் குமார், சென்னை அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமி இயக்குநர், டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. அவர்களில், புதிய டி.ஜி.பி.யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்படவில்லை. இதனால், தற்போது டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன், பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர் சைபர் குற்றப்பிரிவு உட்பட பல பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.