Rock Fort Times
Online News

திருச்சியிலிருந்து மும்பை, யாழ்பாணத்திற்கு தினசரி விமான சேவை..!- வருகிற 30ம்தேதி முதல் தொடங்குகிறது !

 

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவின் மும்பை, டெல்லி, பெங்களூரு, போன்ற நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் இருந்து மும்பை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து வருகிற 30ம் தேதி முதல் திருச்சியிலிருந்து மும்பைக்கு தினசரி நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த விமானமானது நாள்தோறும் இரவு 10:30 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டு, இரவு 12.35 மணிக்கு திருச்சியை வந்தடையும். மீண்டும் திருச்சியில் இருந்து அதிகாலை 1.05 மணிக்கு புறப்பட்டு 3.10 மணிக்கு மும்பை சென்றடையும். மும்பையில் இருந்து பல வெளிநாட்டு விமானங்கள் அதிகாலையில் புறப்படுவதால், இதை இணைக்கும் வகையில் திருச்சி டூ மும்பை விமான சேவை நள்ளிரவு பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல இண்டிகோ நிறுவனம் சார்பில் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினமும் நேரடி விமான சேவை வருகிற 30-ஆம் தேதி துவங்க உள்ளது.இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இவர்கள் சுற்றுலா மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்திற்கு வருகின்றனர். தமிழகத்தின் நடுப்பகுதியாக விளங்கும் திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி திருச்சியில் இருந்து தினமும் மதியம் 12:55 மணிக்கு யாழ்ப்பாணம் புறப்படும் விமானம், பகல் 1:55 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடைகிறது. அதேபோல மறுமார்க்கத்தில் மதியம் 2:55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை 3:50 மணிக்கு திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் திருச்சியிலிருந்து மும்பை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் தொடங்க இருப்பதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்