ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் அலைமோதிய கூட்டம்… * திருவானைக்காவல் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்…!
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் அம்மன் குளிர்ந்த மனதோடு பக்தர்கள் கேட்கும் வரங்களை கொடுப்பதோடு நற்பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். இன்று( ஜூலை 18 )ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் திருச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். திருவானைக்காவல் கோவிலில், அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை அணிந்து மலர்கீரிடம் சூடி, காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். அம்பாள் காலையில் லெட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தந்தார். ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருவானைக்காவல் டிரங்க் ரோடு, சன்னதிதெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
Comments are closed.