திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள காவிரி பாலத்தின் அருகில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, முதலைகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடு ஆற்றுப்பகுதியில் தான் உள்ளன. அப்பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். திருச்சியில் முதலைகளை பராமரிக்க தனியிடங்கள் ஏதுமில்லை. அவை நீர் நிலைகளில்தான் வசித்து வருகின்றன என்பதையும் தெரிவித்தனர். இந்நிலையில், உய்யக்கொண்டான் வாய்க்கால் மற்றும் கோரையாறு உள்ளிட்டவைகளிலும் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக கடந்த இரு வாரங்களாக தகவல்கள் பரவின. தற்போது அந்த இரு வாய்க்கால்களிலும் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உய்யக்கொண்டான் வாய்க்காலில் மாவட்ட ஆட்சியரகம் பின்புறம் உள்ள பகுதியிலும், சற்று தள்ளி கோரையாற்றிலும் முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து வரும் விவசாயக் குடும்பத்தினர் கூறுகையில், முதலைகள் இருப்பது உண்மைதான். அதிலும் சற்று பெரிய அளவிலான முதலைகள் வாய்க்கால்களில் செடிகளுக்குள் மறைந்துள்ளன. ஆடுகளையும், சிறிய கன்றுகளையும் பிடித்து உட்கொள்ளும் அபாயம் உள்ளதால் கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரம் மனிதர்களுக்கே ஆபத்து நேரவும் வாய்ப்புள்ளது என்றனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.