30 ஆண்டு குத்தகை முடிந்ததால் அரசு நிலத்தில் இருந்து திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை காலிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி காஜாமலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை காலம் முடிந்ததை அடுத்து இடத்தை காலி செய்யுமாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், குத்தகை காலத்தை நீட்டிக்கக் கோரிய எஸ்.ஆர்.எம். ஹோட்டலின் மனுவை அரசு நிராகரித்தது. இதனால், ஹோட்டல் நிர்வாகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுவாமிநாதன், குத்தகை காலத்தை நீட்டிக்க கோரிய எஸ்ஆர்எம் ஹோட்டலின் மனுவை அரசு நிராகரித்தத்தை ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து கடந்த வருடம் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா, பூர்ணிமா அமர்வு முன்பு இன்று( ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது. அரசு நிலத்தில் இருந்து திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குத்தகையை நீட்டித்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. குத்தகை உரிமம் முடிந்த பிறகு அதை நீட்டிப்பதை உரிமையாக கோர முடியாது. எஸ்.ஆர்.எம். விடுதியின் குத்தகையை நீட்டிப்பது முழுக்க முழுக்க அரசின் முடிவு சம்பந்தப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர். தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டதால் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் விடுதியை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Comments are closed.