சைவ, வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா?- உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி…!
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது சைவ- வைணவம் குறித்து பேசினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைப் பார்த்த பலரும் பொன் முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கனிமொழி எம்பியே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டு அந்த பொறுப்புக்கு திருச்சி சிவா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பொன்முடி தன்னுடைய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்தநிலையில், அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “பொன்முடியின் பேச்சு துர்திஷ்டவசமானது. அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?. அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. இந்த பேச்சை வேறு எவரேனும் பேசி இருந்தால் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஊழலை எப்படி சகித்துக்கொள்ள முடியாதோ அதே போல வெறுப்பு பேச்சையும் சகித்துக்கொள்ள முடியாது. ஏற்கெனவே, எச்.ராஜா, கஸ்தூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என தமிழக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments are closed.