திமுக அமைச்சர் பொன்முடி சமீப காலமாக பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பொதுமக்களிடம் அதற்கு சம்பாதித்து வருகிறார். திமுக தலைமையிலான தமிழக அரசு அமைந்தவுடன் பெண்களுக்கான இலவச பயணத்தை அறிவித்திருந்தது. இது குறித்து பொது மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, மகளிருக்கான இலவச பேருந்து சேவையை ” ஓசி ” எனக் கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பாலியல் தொழிலாளி தொடர்பாக ஆபாசமாக, கீழ்த்தரமான மொழியில் பேசியிருந்தார். பொதுமேடையில் பெண்கள் மத்தியில் பேசிய இவரது பேச்சு சர்ச்சையை வித்திட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ காட்சிகள் வலைதளங்களில் மீண்டும் வைரலாகின. தொடர்ந்து பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி கண்டனங்கள் எழ, பொன்முடியின் கட்சி பதவியை பறித்து திமுக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்தார் அமைச்சர் பொன்முடி. இந்த நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கமாக பதவி மாற்றம் போன்ற அறிவிப்புகள் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் வெளிவரும். ஆனால், பொன்முடி விஷயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பொன்முடி துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி இடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி சிவாவை விடுவித்து, திமுக துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Comments are closed.