Rock Fort Times
Online News

தொடர்ந்து புறக்கணிப்பு: அதிமுகவில் இருந்து வெளியேறுகிறார் செங்கோட்டையன்? … * 5-ந் தேதி முக்கிய முடிவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செங்கோட்டையன். அமைதியான சுபாவம் கொண்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் யார் என்ற பெயர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றது. ஆனால் எதிர்பாராத விதமாக ஓ. பன்னீர்செல்வமும், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும் முதலமைச்சர் பதவிக்கு வந்தனர். கட்சியில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி அன்னூரில் பாராட்டு விழா நடந்தது. இதில் மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெறவில்லை. இதனை சுட்டிக் காட்டிய கே.ஏ.செங்கோட்டையன் அந்த விழாவையும் புறக்கணித்தார். இந்த சம்பவம் அவர்களிடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க, இனி எக்காலத்திலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று பேசி வந்த எடப்பாடி பழனிச்சாமி, அந்த கட்சியுடன் திடீரென கூட்டணி வைத்துக் கொண்டது அதிமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மைத் ரேயன், அன்வர் ராஜா ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியில் இருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். அப்போது கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடம், 5-ந் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து இன்றும் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “5-ம் தேதி அன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேச போகிறேன். அப்போது என்ன கருத்துகளை சொல்லப்போகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். ஆகவே அதுவரை நீங்கள் பொறுத்திருந்து எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன” என்று கூறினார். ஆக மொத்தத்தில் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வரும் அதிமுகவில் இருந்து விலக செங்கோட்டையன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் திமுக பக்கம் செல்வாரா அல்லது விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா என்பது ஐந்தாம் தேதி தெரியவரும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்