கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் காந்தி மார்க்கெட் நுழைவாயில்களை இழுத்து மூடி உள்ளிருப்பு போராட்டம்- சில்லறை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்…!
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் காந்தி மார்க்கெட்டில் அதன் தலைவர்கள் எம்.கே.கமலக்கண்ணன், எம்.கே.ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் மூர்த்தி, கூடுதல் செயலாளர் மந்தை ஜெகன், பொருளாளர் சபி அகமது, இணைச் செயலாளர் ஸ்ரீதர், காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் செயலாளர் டேவிட் அமல்ராஜ், துணைச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத் தீர்மானங்கள் குறித்து சில்லறை வியாபாரிகள் சங்க தலைவர்கள் எம்.கே.கமலக்கண்ணன், எம்.கே ஜெய்சங்கர் ஆகியோர் கூறுகையில், சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மொத்த வியாபாரிகளை உடனடியாக கள்ளிக்குடி மார்க்கெட்டிற்கு அனுப்ப வேண்டும். எங்களது கோரிக்கையை பரிசீலித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அனைத்து சில்லறை வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து காந்தி மார்க்கெட்டில் கருப்பு கொடி ஏற்றி வியாபாரம் செ ய்வோம். மேலும் காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்து நுழைவாயில்களையும் இழுத்து மூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரத்தை நிறுத்தாவிட்டால் சரக்கு வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். மார்க்கெட் உள்ளே செல்லும் சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதாவது 2 மணி நேரத்திற்குள் வெளியே செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் சில்லறை வியாபாரிகள் தஞ்சை ரோட்டை மறித்து தரைக்கடைகளை போட்டு வியாபாரம் செய்து போராட்டம் நடத்துவோம்.எங்கள் கோரிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக
பரிசீலித்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
**
Comments are closed.