வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் வர்த்தக கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், உணவகங்கள் பல மூடப்பட்டு வருகின்றன. இல்லத்தரசிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் பிரச்சனையை சமாளிப்பது எப்படி என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(14-03-2026) அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்னும் 10 நாட்களுக்கு தமிழகத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கையில் இருப்பதாக ஆலோசனையின் போது அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அனைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கப்படும். வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரை மின்சார பயன்பாட்டிற்கான சலுகை தொடரும். டீ கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இச்சலுகை பொருந்தும். விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.