Rock Fort Times
Online News

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை…!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் தங்கி படித்து வந்துள்ளார். அந்த மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் காரின் அருகே வந்து பார்த்துள்ளனர். அப்போது காரின் உள்ளே ஆண் நண்பரும், கல்லூரி மாணவியும் இருந்ததை பார்த்து, வெளியே வர கூறி உள்ளனர். பின்னர் மதுபோதையில் இருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து ஆண் நண்பரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியது. இதில் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயக்கம் அடைந்தார். கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கோவை பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரர் மற்றும் தவசி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு  கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உட்பட மொத்தம் 113 சாட்சியங்களிடம் விசாரணை நடந்து முடிந்தது. பின்னர் ஒரே மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இரு தரப்பினரின் இறுதி கருத்துக்கள் முற்றிலும் முடிந்த நிலையில் இன்று (மார்ச் 7) தீர்ப்பளிக்கபட்டது. குற்றம் சாட்டப்பட்ட சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைகள் விரைவாக முடிக்கப்பட்டு 4 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்