திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியதாவது:-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இதன்மூலம், 300 தலைவர்களும், 15,000 மேற்பட்ட உறுப்பினர்களும் உருவாக இருக்கிறார்கள். பால்வள சங்கத்தை பொருத்தவரை 300 சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் இருந்தும் 300 தலைவர்கள், 15,000 உறுப்பினர்கள் வர உள்ளனர். இதைத்தவிர சிந்தாமணி, அமராவதி, மாவட்ட கூட்டுறவு அச்சகம், நெசவாளர் சங்கங்கள், பணியாளர்கள் கூட்டுறவு சங்கம், இதுபோன்ற அனைத்து சங்கங்களிலும் திமுகவினர் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. கடந்த அதிமுக ஆட்சியில் பால் கூட்டுறவு சங்கம், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் பொது மக்களுக்கு எந்த திட்டங்களும் சென்றடையவில்லை.
அந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள்தான் சம்பாதித்தார்கள். எனவே தான், தேர்தல் முடியும் வரை நாங்கள் தான் பொறுப்பில் இருப்போம் என்று உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.
ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சோதனைகளால், திமுகவை, திமுக அமைச்சர்களை மிரட்டி பார்க்கிறது. பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பத்து இடங்களையாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற சோதனை நடந்து வருகிறது.
பாஜகவின் திட்டமே அதிமுகவையும் திமுகவையும் இரண்டாகப் பிளக்க வேண்டும் என்பதுதான், முதல்வாின் திட்டங்களால் திருச்சி, பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 எம்பி வேட்பாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஜெயிப்பார்கள். எனவே, இன்று முதல் உங்களுடைய பணிகளை தொடங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை திருச்சி மத்திய, வடக்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் பணிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், பழனியாண்டி, தொகுதி பொறுப்பாளர்கள் ராமலிங்கம் எம்பி , அரசு கொறடா கோவி செழியன் எம்.எல்.ஏ., சந்திரசேகர், உத்திராபதி, மாநில மாணவர் அணி அமைப்பாளர் பி.எம்.ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.