Rock Fort Times
Online News

10-ம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 91.55%

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைக் காட்டிலும் கூடுதலாகும். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் சுமார் 9.08 லட்சம் பேர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வெழுதிய மாணவிகளில் 94.53 சதவீதம் பேரும் தேர்வெழுதிய மாணவர்களில் 88.58 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் 87.90 சதவீதம் பேர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு முடிவுகளை இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப். 8- வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்து இருந்த உறுதிமொழிப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டதாலும் இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவை தெரிந்து கொள்வதாலும் எளிதாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர். அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தங்களது வெற்றியை குடும்பத்தினருடனும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்