சிபிஐ அதிகாரி என்று கூறி திருச்சி முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் எடுத்து நூதன மோசடி…!
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
திருச்சி தில்லைநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன் (வயது 76). இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும், ஒரு மகள் மும்பையிலும், இன்னொரு மகள் கொல்கத்தாவிலும் வசித்து வருகின்றனர். சூரிய நாராயணன் தில்லை நகர் வீட்டில் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண் ணை எப்படியோ தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் இவரை செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் மும்பை போலீஸ் எனவும், சிபிஐ எனவும் கூறியுள்ளனர். நீங்கள் 2 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா மோசடி செய்துள்ளீர்கள், உங்களிடம் விசாரிக்க வேண்டும், உங்களது வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சூரிய நாராயணன் தனது வங்கி கணக்குகளை அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார். சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து விட்டனர். அனைத்து கணக்கு வழக்குகளையும்
சரி பார்த்தபிறகு பணத்தை திருப்பி அனுப்புவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால், சந்தேகம் வந்த சூரிய நாராயணன் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, திருச்சி ஆர்.எஸ்.புரம் இரண்டாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஆன்லைன் மூலம் வேலை தேடினார். அப்போது குஜராத்தில் இருந்து பேசிய பெண் ஒருவர் கூகுள் மேப் ரிவ்யூ செய்வதன்மூலம் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என பேசியுள்ளார்.
மேலும், ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அந்த பெண் கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய செந்தில், ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் அதற்கு கூடுதல் தொகையும், அசல் தொகையும் வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில் சைபர் கிரைம்போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.