தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும்.

இக்கோவிலில்உலகநன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய், நொடியின்றி வாழவும், குடும்பம் செழிக்கவும் மாசி மாதத்தில் நடைபெறும் பூச்சொரிதல் விழாக்காலங்களில் மரபு மாறி தன்னைத்தானே வறுத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது
இக்கோயிலின் தனிச் சிறப்பு. இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று காலை 6.30 மணிக்குமேல் 8.00 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேதமந்திரங்கள் முழங்க கோயிலின் உள் பிரகாரத்தில் உள்ள தங்ககொடிமரத்திற்க்கும்,அஸ்திரதேவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மந்திரங்கள்,மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் படம் தாங்கிய கொடியை
கொடிமரத்தில் ஏற்றினர்..

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா
வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதேபோல ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். தொடர்ந்து
ஒவ்வொருநாளும் இரவு 8 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம்
உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வருகின்ற 17-ந்தேதி அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் எழுந்தருளி
வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகிற18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை
10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதனைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும் 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை
அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது.
25-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி
தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
