திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா… * ஏப்ரல் 30-ம் தேதி தொடங்குகிறது!
திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.30-ம் தேதி தொடங்குகிறது. தேர்த் திருவிழாவையொட்டி ஏப்.30-ம் தேதி மாலை 6 மணிக்கு வாஸ்து பூஜைகள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து மே 1-ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதையடுத்து மே 2-ம் தேதி சுவாமி- அம்பாள் கற்பகத்தரு கிளி வாகனத்திலும், மே 3-ம் தேதி பூதம், கமலம் வாகனத்திலும், மே 4-ம் தேதி கைலாசபர்வதம் அன்ன வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 5-ம் தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 9 மணிக்கு மேல் செட்டிப்பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றிரவு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா வருகின்றனர். மே 6-ம் தேதி திருக்கல்யாணம் வைபவம் நடைபெறவுள்ளது. அன்றிரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் வீதிஉலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் மே 9-ம் தேதி நடைபெற உள்ளது. மே 10-ம் தேதி நடராஜர் தரிசனமும், தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும். இரவு வெள்ளி ரிஷப காட்சி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். மே 11-ம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. மே 12-ம் தேதி மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்ஸவம், மே 13-ம் தேதி இரவு பிச்சாடனார் திருவீதி உலா, மே 14-ம் தேதி இரவு சண்டிகேசுவரர் திருவீதி உலா நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.