Rock Fort Times
Online News

அண்ணா தூக்கி எறிந்த பழைய கோஷத்தை கையில் எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்- அண்ணாமலை…!

திருச்சி மாவட்டம் சிறுகனூரில், இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) சார்பில், “தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்” என்ற தலைப்பிலான மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகட்டும், தமிழ் மொழியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதாகட்டும், பத்தாண்டு காலமாக நம்முடைய தமிழ் கலாசாரத்தின் மாண்பையும் பெருமையையும் இந்திய மக்களும், உலக மக்களும் கண்டு வருகின்றனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம்.
2026 பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சி மலரும். தமிழக எம்.பி.க்களில் பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் மட்டுமே தனது கடமையை சிறப்பாக செய்திருக்கிறார். பெரம்பலூர் தொகுதியில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவது பாரிவேந்தரின் முக்கிய திட்டங்களில் ஒன்று. அத் திட்டத்தை ரயில்வே நிதி நிலை அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளார். அடுத்து வரும் பாஜக ஆட்சியில் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டத்தை அவரே தொடங்கி வைப்பார். இந்த 2 ஆண்டு காலத்தில் திமுக செய்த சாதனைகள் என்ன?, எந்த சாதனையை சொல்லி வாக்கு கேட்க போகிறார்கள். சாதனைகளை வாக்குகளாக மாற்ற திமுகவுக்கு பயம். இதனால்தான் தற்போது வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோஷத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

இந்த கோஷம் அண்ணா காலத்திலேயே எழுந்த கோஷம். அதாவது பழைய பிய்ந்து போன செருப்பு போன்றது. இந்த செருப்பு காலை கடிக்க மட்டுமே செய்யும் என்பதை உணர்ந்துதான் இந்த கோஷத்தை அப்போதே அண்ணா தூக்கி எறிந்து விட்டார். இது கூட தெரியாமல் தமிழக முதல்வர் தற்போது இந்த கோஷத்தை கையில் எடுத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாநாட்டில் ஐஜேகே நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் பேசுகையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார். தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேடு. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று உச்சரிக்கும் இவர்கள், இந்திய மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள் என்றார். மாநாட்டுக்கு தலைமை வகித்து, ஐஜேகே கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து பேசுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி வழியில் செயல்படுபவர் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர். இலவசங்கள் தேவையில்லை என்பதை ஐஜேகே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்களை சுயமாக வாழ வைக்கும் பொறுப்பு ஐஜேகேவுக்கு உள்ளது. ஐஜேகே-பாஜக இணைந்து தமிழகத்தை ஆளும் நிலை வரும். அப்போது அடித்தட்டு மக்களின் நலன் காக்கப்படும் என்றார். மாநாட்டில் காமராசர் மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன், ஜஜே கே மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், இணை பொதுச்செயலாளர் லீமாரோஸ் மார்ட்டின், மகளிர் அணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், துணைத் தலைவர்கள் நெல்லை ஜீவா, ஆனந்தமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்