Rock Fort Times
Online News

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை: ஜூலை 9, 10 இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார். அந்தவகையில் அவர், திருவாரூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 9) மற்றும் நாளை மறுதினம் (வியாழன்) ஆகிய 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர், நாளை காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைகிறார். அங்கு கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க உள்ளார். அதன்பின்னர் அவர், மாலையில் காட்டூர் சென்று அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்து வைக்கிறார். அவர் ‘ரோடு ஷோ’ மூலம் சாலையில் நடந்து சென்று தி.மு.க.வினர், பொதுமக்களின் வரவேற்பை ஏற்கிறார். அன்றைய தினம் இரவு திருவாரூரில் தங்குகிறார். 10-ந்தேதி காலை திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழா முடிவடைந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து சாலைமார்க்கமாக திருச்சி விமான நிலையம் வந்து இங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார். முதல்வர், திருச்சிக்கு வருவதை முன்னிட்டு மாவட்டத்தில் நாளை (ஜூலை 9) மற்றும் நாளை மறுநாள்( ஜூலை 10) ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்