Rock Fort Times
Online News

“இந்தியா” கூட்டத்தில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்….

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இந்த சூழலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த கூட்டணியின் 3-வது கூட்டம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்க வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அத்துடன் பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று ( 31.08.2023 ) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். மும்பையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் குறித்து வலியுறுத்தி பேசுவார் என தெரிகிறது. கூட்டம் முடிந்ததும் 1-ந் தேதி இரவு முதலமைச்சா் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்