திருச்சி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடியில் அமைய உள்ள டைடல் பார்க்- * பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
சென்னை, கோவையை தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூர் அருகில் ரூ.403 கோடி மதிப்பில் அமைய உள்ள டைடல் பார்க் பணிகளை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று(18-02-2025) சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் வி.அருண்ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், பழனியாண்டி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து டைடல் பார்க் அமையவுள்ள இடத்தினை பார்வையிட்டனர். இந்நிகழ்வில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பம்சங்கள்
இந்த டைடல் பார்க் வளாகம் சுமார் 5,58,000 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது. தரை மற்றும் ஆறு தளங்களைக் கொண்ட பிரமாண்ட மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு இடமளிக்கும் வகையில் அலுவலகங்கள், கூட்ட அரங்கம், தரவு மையம், ஃபுட் கோர்ட், வாகன நிறுத்துமிடம் மற்றும் பிற வசதிகள் இடம்பெற உள்ளன. டைடல் பூங்காவிற்காக அடையாளம் காணப்பட்ட இடத்தின் வழியாக செல்லும் இரண்டு நிலத்தடி வடிகால் (UGD) குழாய்களை மாற்றுவதற்காக டைடல் நிர்வாகம் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு சுமார் 12 கோடி ரூபாய் பணம் செலுத்தியது . அதன்மூலம் டைடல் பார்க் தளத்தைக் கடக்கும் சுமார் 1,730 மீட்டர் நீளமுள்ள கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படுகின்றன. அதன்படி, தற்போதுள்ள வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் குழாய்கள் பூங்கா தளத்திற்கு வெளியே மாற்றப்படுகின்றன.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வரவிருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் புதிய டைடல் பூங்கா அமையவுள்ளது. வணிக மையமான IBT, விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் நகரத்திற்கு அருகாமையில் இருப்பதால், இந்த இடம் இந்த திட்டத்திற்கு ஏற்றதாகவும், போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் என கருதப்படுகிறது. காரணம் இந்த இடம் சென்னை-திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அணுகக்கூடியது மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நவல்பட்டில் உள்ள எல்காட் ஐடி பூங்காவிற்குப் பிறகு திருச்சியில் அமைக்கப்படும் இரண்டாவது ஐடி பூங்கா இதுவாகும். புதிய டைடல் பூங்காவின் உருவாக்கம், நகரத்தில் வளர்ந்து வரும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவை நிறுவனங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.