திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் * காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
மக்கள் குடியிருக்கும் இடத்திலேயே மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தில் தமிழகத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் ஒவ்வொன்றும் 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. முதல்கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் 311 மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 189 என மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டுக்காக ஜூன் 6-ல், முதல்வர் திறந்து வைத்தார். தற்போது இரண்டாம் கட்டமாக 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று( ஜூலை 3) திறந்து வைத்தார். இவற்றில் திருச்சி
பஞ்சப்பூர் மற்றும் அரியமங்கலம் ஆகிய 2 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், அம்மையப்ப நகர், அம்மன் நகர், பாபு செட்டி மெயின்ரோடு, சோழராஜபுரம், கருமண்டபம், அரவானூர், மேலபாண்டமங்கலம், இரயில்வே பி வகுப்பு, சஞ்சீவி நகர், ஸ்டார் நகர், சுந்தர்ராஜ் நகர் மற்றும் வசந்த நகர் ஆகிய 11 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் அடங்கும். அப்போது உறையூர் சோழராஜபுரம் நகர் நல மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சுகாதார நிலையத்தை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹேமசந்த் காந்தி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயல்படும் நேரம் ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோர் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். இந்த நகர்புற நல்வாழ்வு மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
Comments are closed.