மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. அவர்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசு ரூ.6000 வெள்ள நிவாரண நிதி அறிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்ட பயிர்கள், படகுகள் போன்றவற்றிற்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க ரூ.5 ஆயிரத்து 60 கோடி முதல் கட்டமாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும், வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
இதையடுத்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுச் சென்றார். மேலும், தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.950 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தநிலையில், வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழு நாளை (டிச.11) தமிழகம் வருகிறது. இந்த குழு 2 பிரிவாக பிரிந்து சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை 2 நாள் பார்வையிட்டு கணக்கீடு செய்கின்றனர். இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை நடத்த இருக்கிறது. அதனைத்தொடர்ந்துமத்திய குழு தங்களது ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். இதையடுத்து அடுத்தகட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என்று தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.