Rock Fort Times
Online News

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் கொண்டாட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு…!

கோவையின் பிரதான சாலையான அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் இந்த மாதம் நிறைவுற்றது. இந்த மேம்பாலத்தின் பணிகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் துவங்கியது என்பதால் அதிமுகவினர் தனியாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். உப்பிலிபாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், கே.ஆர்.ஜெயராமன், கிணத்துகடவு தாமோதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேளதாளம் இசைக்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மேம்பாலத்தில் 10 கிலோமீட்டர் தூரம் பயணித்தனர் இந்தநிலையில், ஜிடி நாயுடு மேம்பாலத்தில் அனுமதியின்றி ஒன்று கூடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி கூறுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க அரசு முடிவு எடுத்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு, 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்தப் பாலப் பணிகளை கிடப்பில் போட்டது திமுக. இதனை முன்பே முடித்து இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பே திறந்திருக்கலாம். அதிமுக தான் இந்த பாலத்திற்கு வித்திட்டது. தற்போது தாங்கள் தான் பாலத்தை கட்டியதாக திமுக சொந்தம் கொண்டாடுகிறது. இந்த பாலத்திற்கு சொந்தம் கொண்டாட வேண்டியது அதிமுக தான் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்