திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் அருகே சிசிடிவி அறை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… ( வீடியோ இணைப்பு)
திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் அருகே காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கேமரா மூலம் வாகன விதி மீறல்கள், சாலை விபத்துகள், மணல் திருட்டு போன்றவை கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் இங்கு ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கொள்ளிடம் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால் இந்த கண்காணிப்பு அறை திறக்கப்படாமல் பராமரிப்பு இன்றி பூட்டி இருந்தது. இந்தநிலையில் இன்று(22-02-2025) அதிகாலை திடீரென சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை பார்த்து ரவுண்டானா பகுதியில் இருந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இருந்தாலும் இந்த தீ விபத்தில் கண்காணிப்பு அறையில் பொருத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த எல்இடி டிவி மற்றும் சிசிடிவி கேமரா எக்யூப்மெண்ட்ஸ் உள்ளிட்ட சுமார் ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் வேறு யாரும் தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.