வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் வெள்ளக் காடானது காவிரி… * திருச்சி உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவை நிரம்பி வருகிறது. இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 500 கனஅடியாக இருந்தது. இதையடுத்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சம் கனஅடிதண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுபோக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து இன்று 2-வது நாளாகவும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆறு வெள்ளக்காடானது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 11 மாவட்ட கலெக்டர்களுக்கும் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Comments are closed.