சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சீயோன் நகர் பகுதியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட தகராறில் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் அழகர் ஆகிய இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சி.சி.டி.வி. காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில், இருவர் ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியும் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் மற்றொருவரைத் துரத்தும் காட்சியும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ஆகாஷை கைது செய்ய முயன்ற போது போலீசாரிடமிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆகாஷுக்கு கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அவரை போலீசார் அடித்து கொன்று விட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதோடு மதுரை – ராமேஸ்வரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஆகாஷின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அமைச்சர் பெரிய கருப்பன், காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் ஆகாஷ் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Comments are closed.