திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் 3 இளம் பெண்கள் திரைப்பட பாடல் ஒன்றுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இதுமட்டுமின்றி தெருக்களிலும் நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர். ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் உரிய அனுமதி பெறாமல் இது போன்ற வீடியோக்கள் எடுக்கக் கூடாது என்கிற விதி நடைமுறையில் உள்ள நிலையில் 3 இளம் பெண்கள் நடனமாடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருப்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் நடனமாடிய 3 இளம் பெண்கள் மீதும் அந்த வீடியோவை எடுத்த இளைஞர் மீதும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் அநாகரிகமாக அல்லது தொல்லை தரும் வகையில் நடந்து கொள்ளுதல், அனுமதி இன்றி ரயில்வேக்கு சொந்தமான இடத்திற்கு செல்லுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், இதுபோல் இனி செய்யக்கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Comments are closed.