திருச்சி முக்கொம்பு அருகே பஸ் மோதியதில் அப்பளம் போல நொறுங்கிய கார்- பெண் பலி, 2 பேர் படுகாயம்….! ( வீடியோ இணைப்பு)
நாமக்கல் மாவட்டத்திலிருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. காரை முத்துவேல்(50) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் அருகே கார் வந்தபோது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செல்ல க்கூடிய நகர பேருந்து அங்கு நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
அந்த பஸ்சை கடந்து செல்ல கார் முயன்ற போது எதிரே மற்றொரு கார் வந்துள்ளது. உடனே பிரேக் போட்டு நிறுத்திய முத்துவேல் கார் மீது பின்னால் கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரின் உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு அபய குரல் எழுப்பினர். உடனே பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் கார் பலத்த சேதம் அடைந்து இருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி காரில் சிக்கியவர்களை மீட்டனர். இருந்தாலும் ஒரு பெண் உடல் நசுங்கி பலியானார். காரை ஓட்டி வந்த முத்துவேல் மற்றும் காரில் வந்த கவிதா ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கவிதாவை சிங்கப்பூருக்கு விமானத்தில் அனுப்பி வைக்க அவர்கள் திருச்சி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Comments are closed.