பூமியின் நிழலானது சந்திரனின் மேல் விழும் நிகழ்வைத்தான் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். அதாவது, சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் இந்த நிகழ்வு சாத்தியம் ஆகிறது. இந்த சந்திர கிரகணம், ஒரு முழு நிலவு நாளில் அதாவது, பவுர்ணமி தினத்தன்று மட்டுமே நிகழும். அதன்படி, வருகிற 7-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு நடக்கிறது. அன்றையதினம் இரவு 9.57 மணிக்கு பூமியின் நிழலால் சந்திரன் மறைய தொடங்கும். இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை அதாவது, 82 நிமிடங்கள் நீடிக்கும். பின்னர் அதிகாலை 1.26 மணியில் இருந்து சந்திரன் பூமியின் நிழலை விட்டு வெளியேறிவிடும். சந்திரன் முழு கிரகணம் அடையும்போது, வானத்தில் அது மறைந்துவிடாது. மாறாக அந்த நேரத்தில் அடர் சிவப்பு நிறத்தில் மிக அழகாக தோன்றும். அவ்வாறு சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதாவது, சூரியனிடம் இருந்து வரும் ஒளி கதிர்களானm சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா ஆகிய 7 வண்ணங்களில் சிவப்பு நிறம் ஒளி சிதறல் குறைவாகவும், அதே நேரத்தில் அதனுடைய அலை நீளம் அதிகமாகவும் இருக்கும். இது பூமியின் வளிமண்டலத்தின் மீது மோதும்போது ஒளிவிலகல் அடைகிறது. இதன் காரணமாகவே சந்திரன் சிவப்புநிறமாக மாறுகிறது. அந்தவகையில் 7-ந் தேதி இரவு 9.57 மணிக்கு பகுதி கிரகணம் தொடங்குகிறது. முழு கிரகணம் 11.01 மணிக்கு ஆரம்பிக்கிறது. முழு கிரகணத்தைநள்ளிரவு 11.42 மணிக்கு பார்க்க முடியும். அதன் பின்னர், 12.23 மணிக்கு முழு கிரகணமும், அதிகாலை 1.27 மணிக்கு பகுதி கிரகணமும் முடிந்து, அதிகாலை 2.25 மணிக்கு புறநிழல் பகுதியைவிட்டு வெளியேறும். வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், இந்த இயற்கையான, அழகான, அற்புதமான நிகழ்வை கண்டு ரசிக்கலாம் என்றும் அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
Comments are closed.