‘தனியாக நின்றால் தி.மு.க.வை வீழ்த்த முடியுமா? எங்கள் கூட்டணியில் இணைந்து செயல்படுங்கள்! விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு!
வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுகவை வீழ்த்துவது தான் எங்களது குறிக்கோள் என்றும், தேர்தலில் திமுகவுக்கும், த.வெ.க.வுக்கும் இடையே தான் போட்டி என்றும் உரத்த குரலில் விஜய் பேசி வருகிறார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “1967-ல் நேர் எதிர்க்கட்சியாக இருந்த ராஜாஜியும், தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக வியூகம் வகுத்து கூட்டணி அமைத்தார்கள். கொள்கை கூட்டணி வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு. அரசியலில் வியூகம் முக்கியம். த.வெ.க. தலைவர் விஜய் வாக்கு சதவீதத்தை மட்டுமே நிரூபிக்க தேர்தலுக்கு வந்தால் சரி. ஆனால் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கும்போது, அதே நோக்கத்துடன் இருக்கும் கூட்டணியில் இணைவதுதான் சரியானது. தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வுக்கு 15 சதவீத வாக்குகள் கிடைத்தால் போதுமா? சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்காமல் விஜய் 15 சதவீதம் வாக்கு பெற்றாலும் அது பூஜ்ஜியம்தான். தி.மு.க.வை வீழ்த்த விஜய்யின் வியூகம் என்ன? தனியாக நின்றால் விஜய்யால் தி.மு.க.வை வீழ்த்த முடியுமா? கூட்டாகத்தான் வீழ்த்த வேண்டும். தனித்து ஓட்டு வாங்குவதால் என்ன பயன்? எதிர்க்கட்சியின் வாக்குகள் உதிரியாக போய்விட்டால் தி.மு.க.வை தோற்கடிக்க முடியுமா?. தி.மு.க.வை வீழ்த்த கூட்டணி உறுதியாக இருக்க வேண்டும். இதனை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் அவர் இணைய வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.