Rock Fort Times
Online News

கொளுத்தும் கோடை வெயில் ! மருத்துவ உதவிகள் தயார் – திருச்சி கலெக்டர் தகவல்!

திருச்சியில் வெப்ப அலை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் மருந்துகள், படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். உலகளவில் பருவநிலை மாற்றம் காரணமாக கோடைக்கால வெப்ப அளவு அதிகரிப்பது வழக்கம்.இந்த வருடம் கோடையையொட்டி வெப்ப அலைகளின் தாக்கம் திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. உலக வானிலை அமைப்பின் வரையறைப்படி வெப்ப அலையானது 5 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக தினசரி வெப்பநிலையில் 5 டிகிரி உயர்ந்து வருகிறது. இந்த வெப்ப அலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருச்சி மாவட்டத்தில் வெப்ப அலை அதிகரிப்பால் பாதிக்கும் மக்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தலைமை அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப நோய் தொடர்பான சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து தப்புவதற்கு : உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். எலுமிச்சை சாறு, இளநீர்,மோர் மற்றும் பழச்சாறுகள் அவ்வப்போது குடிக்க வேண்டும். பருவகால பழங்கள்,காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை பகல் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பதுடன் மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்க்கவும் யோசனைகள் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்