தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி காவல் ஆய்வாளர் மணிமனோகரன், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீசார் திருச்சியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் உய்யங்கொண்டான் வாய்க்கால் கரை ஓரத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதனை பதுக்கி வைத்திருந்த கரூர் மாவட்டம் குளித்தலை கல்லடை பகுதியைச் சேர்ந்த சி.செபாஸ்டியன் அந்தோணி தாஸ் (42), திருச்சி தென்னூரைச் சேர்ந்த ஆனந்த் (42) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மதிப்புக்கூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர் .
Comments are closed, but trackbacks and pingbacks are open.