தக்காளி விலை தொடர்ந்து உச்சமடைந்து வரும் நிலையில், தக்காளி கடைக்கு வியாபாரி ஒருவர் பவுன்சர்களை நியமித்த சம்பவம் உபி-இல் நடந்துள்ளது கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை தக்காளி விலை ரூ. 40-50 என்றே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், அதன் பிறகு தக்காளி விலை திடீரென எகிறியது. சில நாட்களில் மளமளவென அதிகரித்த தக்காளி விலை, ரூ.100ஐ தாண்டியது. திடீரென வரத்து குறைந்ததே தக்காளி விலை அதிகரிக்கக் காரணமாகும். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க தக்காளி விலை உச்சம் தொட்டது
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கே வாரணாசி அடுத்துள்ள லங்கா என்ற பகுதியில் காய்கறி வியாபாரி ஒருவர் பவுன்சர்களை பணியமர்த்தியுள்ளார். தக்காளி விலை கடந்த சில நாட்களாகவே ரூ.100ஐ கடந்து உச்சத்தில் விற்பனையாகி வரும் நிலையில், இந்த வியாபாரி தக்காளிக்கு பவுன்சர்களை பணியமர்த்தியுள்ளது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தக்காளி விற்பனையின் போது, அங்கே வாங்க வருவோர் பேரம் பேசுகிறார்களாம். அப்போது சிலர் ஆவேசமாக எல்லை மீறியும் நடத்துக் கொள்கிறார்களாம். அவர்களைத் தடுக்கவும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் இரண்டு பவுன்சர்களை அவர் நிறுத்தியுள்ளார். நாடு முழுக்க தக்காளி விலை உச்சமடைந்து வரும் நிலையில், இதுபோன்ற வினோதமான சம்பவங்களை ஆங்காங்கே பார்க்கவே முடிகிறது 
இது தொடர்பாக அந்த வியாபாரி அஜய் ஃபௌஜி கூறுகையில், “தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். எனது கடையிலும் தக்காளி வாங்க வருவோரை விலையைக் கேட்டவுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். பேரம் பேசுகிறோம் என்ற பெயரில் அவர்கள் வாக்குவாதம் செய்கிறார்கள். இதனால் கடையில் அடிக்கடி கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது. சிலர் திட்டமிட்டு வன்முறையைக் கிளப்பிவிட்டு தக்காளியைத் திருடிச் செல்லவும் முயல்கிறார்கள் இதை முடிவுக்குக் கொண்டு வரவே பவுன்சர்களை பணியமர்த்தியுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார். கடையில் குறிப்பாகத் தக்காளி இருக்கும் இடத்தில் இவர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்களாம். ஒரு கிலோ தக்காளியை 140-160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்த வியாபாரி ஃபௌஜி, தனது கடையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுன்சர்களை நிறுத்தியுள்ளார். அதேநேரம் பவுன்சர்களுக்கு எவ்வளவு பணம் தருகிறார் என்பது குறித்த தகவலை அவர் பகிர மறுத்துவிட்டார். இப்போதும் தக்காளி விலை தொடர்ந்து 100 ரூபாயைக் கடந்தே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பவுன்சர்களை நியமிக்கும் முன்பு எத்தனை பேர் வந்து வாங்கினார்களோ.. அதே எண்ணிக்கையில் தான் இப்போதும் வருகிறார்கள். ஆனால், இப்போது கூச்சல் குழப்பம் வெகுவாகவே குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.