நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நீலாயதாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாகை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர் சுப்ரியா, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினா் அடங்கிய காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து கோவிலின் நுழைவாயிலில் உள்ள, அர்ச்சனை பொருட்கள் விற்கும் கடை, கோவில் வளாகம், பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினா். கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காமல் சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. பின்னர் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது. தவறான இதுபோன்ற தகவலை தெரிவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை எஸ்.பி ஜவஹர் தெரிவித்துள்ளார். நாகை நீலயதாட்சியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கோவிலை சுற்றி வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
