பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது: எங்கள் தலைமையில் தான் கூட்டணி இருக்கும்…- தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றனர். செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:- தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை. தவெக தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும். மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது. தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சியில் 2-வது மாநில மாநாடு:
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை விஜய்க்கு வழங்குவது.
* தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது மதுரையில் நடத்துவது.
* ஜூலை 2வது வாரத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed.