Rock Fort Times
Online News

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மனு தர்மத்தை சட்டமாக்கும் : திருச்சியில் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேச்சு…

மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், பாஜகவை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம் என்ற தலைப்பிலான மாநாடு திருச்சி, புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நேற்று ( 07.01.2024 ) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில் :

இந்திய கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ள இடதுசாரி அமைப்புகளுக்கு உறுதுணையாக முடிவெடுத்துள்ள மக்கள் அதிகாரத்துக்கு பாராட்டு. வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இறுதிப் போர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து, மோடி மீண்டும் பிரதமரானால், இதுபோல கூட்டங்களை நடத்த முடியாது, நமது சித்தாந்தங்கள் குறித்து பேசமுடியாது, நமது தேசத்தையும் மக்களையும் காப்பாற்ற முடியாது. கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் மற்றும் அனைத்து முற்போக்கு கூட்டணிகளும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. இந்துத்துவ கொள்கை என்பது சனாதன தர்மம் மற்றும் கார்ப்பரேட் அரசியலின் கலவைதான். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுதான் பாஜக. அதற்கு முன் தோன்றிய அமைப்பு ஆர்எஸ்எஸ். தற்போது நூற்றாண்டை கொண்டாடவுள்ளது. எனவேதான் அது இந்து பெரும்பான்மை வாதத்தை உருவாக்க விரும்புகிறது, நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது, இறையாண்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஆனால் பாஜக சட்டத்தை பயன்படுத்தியே தனது கொள்கைகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இழக்கச் செய்தது, சிஏஏ சட்டத்தை கொண்டு வருவது என அடுத்தடுத்து செயல்படுத்தி வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த மனு தர்மத்தை சட்டமாக்கி நிலை நிறுத்துவதே அவர்களின் திட்டமாக உள்ளது. அதற்கு ஒருபோதும் நாம் இடம் தரக்கூடாது. பாஜக வை தோற்பகடிப்பதால் ஆர்எஸ்எஸ் ஐ தோற்கடித்து, அதன் கருத்தியல்களையும் வேரறுப்போம் என பொருளாகும். உலக நாடுகள் அனைத்தும் மத அடிப்படையில் உள்ளபோது இந்தியாவில் மட்டும் ஏன் இந்து மதம் அரச மதமாக இருக்கக்கூடாது என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. எனவே அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இது ஜனநாயக நாடு. இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பாஜக வை தோற்கடிப்பதில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம் என்றார் .

திமுக முன்னாள் எம்.பி (மாநிலங்களவை)., டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் மனசாட்சி, சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம் பற்றி விவரிக்கிறது ஆனால் பாஜக அரசு அதை பொருட்படுத்தவில்லை. நமது வாக்குரிமையில் மட்டுமே நமது பலம் உள்ளது, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநில சுயாட்சியின் இறையாண்மையை பறிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக கொண்டு வந்த சிஏஏ சட்டம் முஸ்லிம்களையும் இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்துள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் பொதுச் செயலாளர் சி.ராஜூ தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சிபிஐ மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்