அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி பாஜக மாநில நிர்வாகி செல்வக்குமாரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜகவின் மாநில அளவில் பொறுப்பில் இருக்க கூடிய செல்வக்குமார் தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக அமைச்சர்களை பற்றியும், திமுக அரசை பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு தரப்பினரிடையே மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பாஜக தொழிற்பிரிவு மாநில துணை தலைவர் செல்வக்குமார் சமூக வலைதளத்தில் கருத்தும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக திமுகவை சேர்ந்த சுரேஷ்குமார் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகார் அடிப்படையில் பா.ஜ.கவை சேர்ந்த செல்வகுமாரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். செல்வக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.