மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக- திருச்சியில் திருமாவளவன் பரபர…!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 5) திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசி உள்ளோம். தேசிய அளவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளை தடுக்க வேண்டும் என ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு இது குறித்து பொருட்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என கூறி உள்ளது. சட்டம் இயற்றும் வரை ஆணவ கொலைகளை தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் காவல் துறைக்கு சில வழிகாட்டல்களை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் எந்த மாநில காவல் துறையும் அதை பின்பற்றுவதில்லை. ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வி.சி.க சார்பில் ஆகஸ்ட் 9 மற்றும் 11 ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 9-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்த பட்டியலை நிறைவேற்றி வருகிறது. அதில் பல தில்லுமுல்லு நடந்து வருவதாக தெரிகிறது. பா.ஜ.க விற்கு ஆதரவாக அந்த திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை. ஆனால் அதனை விவாதிக்க மத்திய அரசு தயங்குகிறது. தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் இது ஜனநாயக விரோதம். தேர்தல் ஆணையம் பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இது நாட்டிற்கு மிகுந்த ஆபத்தானது. டெல்லியில் வெளிநாட்டு தூதரங்கள் நிறைந்த பகுதியில் எம்பி சுதாவிடம் இருந்து நகை பறிக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் மீதான நன்மதிப்பிற்கு உலக அரங்கில் களங்கத்தை ஏற்படுத்தும். தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் கூட்டணியாக உருவாகவில்லை. பாஜக-அதிமுக இரண்டு கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாகவும் அவர்களை தங்கள் கூட்டணிக்கு வருமாறு பா.ஜ.க அழைப்பு விடுப்பதாகவும் தகவல்கள் வருகிறது என்று தெரிவித்தார். உங்களுக்கு அது போல் ஏதேனும் அழைப்பு வந்துள்ளதா என்கிற கேள்விக்கு, அவ்வாறு எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை என பதில் அளித்தார்.
Comments are closed.