பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(29-11-2025) திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். பாஜகவில் இருந்து போயிருந்தால் நான் கருத்து கூறுவேன். ஆனால், அவர் அதிமுகவிலிருந்து விலகி வேறொரு கட்சியில் இணைந்து இருக்கிறார். அதைப்பற்றி நான் கருத்து கூற இயலாது. என்னைப் பொறுத்தவரை செங்கோட்டையன் அங்கு சென்று இருக்கக் கூடாது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். திமுக அரசு, மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது. ஏற்கனவே கட்சி நடத்தி கொண்டிருந்தவர் கமலஹாசன். அவர் கட்சியை கலைத்து விட்டாரா? அல்லது திமுகவில் சேர்ந்து விட்டாரா என தெரியவில்லை. எங்களுக்கு ‘ஸ்லீப்பர் செல்’ யாரும் இல்லை. நாங்கள் நேரடியாக களத்தில் இருப்பவர்கள். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், புதுக்கோட்டை சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது, திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பின்னர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததும் திமுக ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஏதோ ஒரு சூழலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அப்படி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் என்ன செய்தார்? தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும், கஞ்சா, போதைப் பொருள் புழக்கம். தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து குற்றச் செயலுக்கும் போதை தான் காரணம். அதேபோல, கோவை மாணவி பாலியல் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல், வேறு குற்றவாளிகளை சுட்டுப் பிடித்துள்ளனர்” என குற்றம் சாட்டினார். பாஜக தான் திட்டமிட்டு செங்கோட்டையனை தவெகவிற்கு அனுப்பியதாக கூறுவது முற்றிலும் தவறானது. செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர், முதலமைச்சர் உத்தரவின்படி அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு தான், தவெகவில் இணைந்துள்ளார். எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அறிவுரைப்படி தான் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என்பது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.