தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் மதுராந்தகம் தாராபுரம் ஆகிய 7 தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளின் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் வருகிற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்ற நிலை இருந்தது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ். சுகன்யாவும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை குறிப்பு:
பரந்தாமன் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளராகவும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை, எழும்பூர் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு கரிகாலன், செழியன் என இரு மகன்கள் உள்ளனர்.
சுகன்யா,
இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியை சேர்ந்தவர். சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் திமுகவின் ஒன்றிய அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தாராபுரம் சொந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அங்குள்ள பொதுமக்களுடன் நீண்ட நாட்களாக அரசியல் மற்றும் கட்சி ரீதியான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

Comments are closed.