பீகாரில், முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம் பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் 2 நாட்கள் பயணமாக பீகாருக்கு சென்றார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சிந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் சென்றனர். பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும், தேர்தலுக்கான தயார்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.43 கோடி. இதில், சுமார் 14 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளனர். பீகார் தேர்தல் அமைதியான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும். அனைத்து அதிகாரிகளும் முற்றிலும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும். எந்தவொரு ஊடகம் அல்லது தளத்திலும் ஏதேனும் போலி செய்திகள் அல்லது தவறான தகவல்கள் இருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்படும். பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.18-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்.21-ம் தேதியும் தொடங்குகிறது.வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன, இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.