Rock Fort Times
Online News

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பட்டு தேவானந்த் பதவியேற்பு!

ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணிமாற்றம் செய்து கடந்த மார்ச் 23-ந்தேதி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 14 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசிய அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் பிறந்த நீதிபதி பட்டு தேவானந்த், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் கண்ணியம் உண்டு என தீர்ப்பளித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த குறுகிய காலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், குறிப்பாக ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்து வைத்திருப்பதாகவும் பாராட்டி பேசினார். இதேபோல பிற வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள், நீதிபதி பட்டு தேவானந்தை வரவேற்று பேசினர். பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி பட்டு தேவானந்த், அம்பேத்கர் மற்றும் பெரியார் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அரசியல் சாசனம் வகுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. நாட்டில் பல சட்டங்கள் வகுக்க சென்னை ஐகோர்ட்டைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். தீர்ப்புகள் வழங்குவது மட்டும் நீதிபதிகளின் கடமையல்ல. அதனை அமல்படுத்தவும் வேண்டும். அமல்படுத்தாத தீர்ப்புகள் வெறும் காகிதங்களாகத் தான் இருக்கும் என்று பேசினார். ஆந்திரா அரசின் அரசு பிளீடராக பணியாற்றிய அவர், 2020ம் ஆண்டு ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி பிறந்த பட்டு தேவானந்த், ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, 1989-ம் ஆண்டு வக்கீல் பணியைத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்