திருச்சி பெரியபஜார் காசியா பிள்ளை சந்து கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). திருச்சி மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவரான இவர் அந்தப் பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் அந்தப் பகுதி மாநகராட்சி பூங்காவில் கஞ்சா புகைக்கும் சமூக விரோத கும்பல் குறித்து போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் இன்று(07-05-2024) காசியா பிள்ளை சந்து பகுதியில் சென்றபோது மர்மகும்பல் அவரை வழிமறித்து எங்களைப் பற்றி போலீசில் எதற்காக தவறான புகார் அளித்தாய் என கேட்டு தகராறு செய்தனர்.

பின்னர் மரக்கட்டை மற்றும் கல்லால் அவரை சரமாரியாக தாக்கினர். இதை தட்டிகேட்ட அவரது உறவினர் சீனிவாசன் என்பவரையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பி சென்றது. இதில் இரண்டு பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி கள்ளதெருவை சேர்ந்த நடராஜன் (21), சமஸ் பிரான் தெருவை சேர்ந்த சுகுமார் (19), உறையூர் நவாப் தோட்டத்தைச் சேர்ந்த சேரன் (21), அரியமங்கலம் கோபாலக் குறிச்சியை சரவணன் (19 )ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று கள்ளர் தெருவை பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு செல்வராஜ் மீது தாக்குதல் நடத்திய 20க்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் கூறும் போது, மாநகராட்சி பூங்காவில் தினமும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் கஞ்சா போதை கும்பல் முகாமிடுகிறது. பூங்கா பூட்டப்பட்டாலும் சுவர் ஏறி குறித்து உள்ளே சென்று மது அருந்தி கஞ்சா புகைக்கிறார்கள்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வராஜ் மீது தாக்குதல் தொடுத்த 20க்கும் மேற்பட்ட வர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் பெரிய கடை வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.