வழக்கறிஞராக ஒருவர் பணியாற்றவும், நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் வாதாடவும் வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. பார் கவுன்சில் அங்கீகாரமும் தேவை. பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே ஒருவர் வக்கீலாக அங்கீகரிக்கப்படுவார். ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கென தனித்தனி பார் கவுன்சில்கள் உள்ளன. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என இரண்டு மாநிலத்திற்கும் சேர்த்து பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என்கிற அமைப்பு இயங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களை கண்காணிப்பது, அவர்கள்மீது ஏதாவது புகார்கள் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பது, புகாரின் தீவிரத்தன்மையை பொறுத்து தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் அங்கீகாரத்தை கூட ரத்து செய்யும் உரிமை ஆகியவை பார் கவுன்சிலுக்கு உண்டு. தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 25 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தி புது உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றனர். அந்தவகையில் வருகிற மார்ச் 30ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வெற்றிபெற மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களின் ஆதரவு தேவை என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தாலுகா நீதிமன்றங்கள் தொடங்கி மாவட்ட நீதிமன்றங்கள், உயர்நீதி மன்றம் என கோர்ட் வளாகங்கள் ஒவ்வொன்றிலும் இப்போதே பார் கவுன்சில் தேர்தலுக்கான களப்பணிகள் ஜரூராக தொடங்கி விட்டன. அந்தவகையில் திருச்சியின் மூத்த வழக்கறிஞரான ஓம் பிரகாஷின் ஜூனியரான வழக்கறிஞர் பி.ஷீலாவும் பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு முதல் முறையாக போட்டியிடுகிறார். கடந்த 2005லிருந்து வழக்கறிஞராக இருக்கும் இவர், அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்து வைத்திருக்கக்கூடியவர். ஆளும் கட்சியான திமுகவின், திருச்சி மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் ஷீலா இருப்பதால் பெரும்பான்மையானவர்கள் இவரை ஆதரித்து வருகின்றனர். இவருக்காக திமுகவின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர். இளங்கோவும் வக்கீல்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வருகிறார். இதுகுறித்து நாம் வழக்கறிஞர் ஷீலாவிடம் பேசினோம். அப்போது அவர் தெரிவித்ததாவது., “பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்களுக்கான கேடயம் போன்றது. வழக்கறிஞர்களின் நலனுக்காக பல்வேறு உதவிகளை பார் கவுன்சில் மூலம் செய்ய முடியும். உதாரணமாக தமிழகம் முழுவதும் ஜூனியர் உள்ள வழக்கறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.5000 உதவித்தொகை வழங்குவது, வழக்கறிஞர்களின் மருத்துவ செலவுகளை எளிமைப்படுத்த ஹெல்த் இன்சூரன்ஸ் பெற்றுத்தருவது, இதயநோய் உள்ளிட்ட தீவிர உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிற பட்சத்தில் மருத்துவ செலவுகளை 50 சதவிகித சிறப்பு சலுகைகளின்மூலம் மேற்கொள்ள வழிவகை செய்வது, தற்போது தமிழக அரசு வழங்கிவரும் மகளிர் உரிமைத் தொகையை பெண் வழக்கறிஞர்களுக்கும் பெற்றுத்தர முயற்சி செய்வது, கஷ்டப்படும் பெண் வழக்கறிஞர்கள் ஸ்கூட்டர்கள் வாங்க மானியம் பெற்றுத்தருவது, நீதிபதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வது போன்ற வழக்கறிஞர்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தும் பல்வேறு செயல் திட்டங்கள் என்னிடம் உள்ளது. வழக்கறிஞர்கள் எனக்கு முதல் வாக்கு அளித்து வெற்றிபெற செய்யும் பட்சத்தில் இதுபோல இன்னும் பல திட்டங்களை மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த முடியும். நான் ஆளும்கட்சியான திமுகவிலும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக பொறுப்பில் இருக்கிறேன். இதனால் வழக்கறிஞர்கள் சார்ந்த கோரிக்கைகளை எளிதில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். அனைத்திற்கும் மேலாக, கடந்தமுறை நடைபெற்ற பார் கவுன்சில் தேர்தலில் பெண்களும் கூட பொதுப்பிரிவில் தான் போட்டியிட்டனர். ஆனால், இந்த முறை முதல்தடவையாக பெண்களுக்கென 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 7 பெண்கள் போட்டியிட்டு உறுப்பினராக முடியும். அந்த வகையில் பெண் வழக்கறிஞர்கள் மத்தியில் எனக்கு அமோக ஆதரவு உள்ளது. எனவே நடைபெறவுள்ள பார்கவுன்சில் தேர்தலில் வெற்றிபெற்று திருச்சிக்கும், என்னை உயர்த்தி அழகு பார்க்கும் என் வழிகாட்டியான மூத்த வழக்கறிஞர் ஓம்.பிரகாஷ்க்கும் பெருமை சேர்ப்பேன்” என்றார்.

Comments are closed.