சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு பஞ்சு மிட்டாய். பஞ்சு மிட்டாயின் ரோஸ் கலர் அனைவரையும் ஈர்க்கக் கூடியது. அந்த கலர் தான் அந்த மிட்டாய்க்கு இன்று வேட்டு வைத்து விட்டது. ஆம்! ரோஸ் கலர் வருவதற்கு ரசாயனம் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. புகார்களின் அடிப்படையில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாயை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது ஊர்ஜிதம் ஆனது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.