தமிழகத்தில் காவல்துறையினர் தங்களது சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் “போலீஸ்” என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு விதிகளை மீறுவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக “போலீஸ்” எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் சோதனை செய்ய தயங்குகின்றனர். இந்நிலையில், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள தனிப்பட்ட வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மண்டல ஆய்வாளர்களுக்கும் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சிலர் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி வருவது தெரிய வந்துள்ளது. தேச விரோதிகள், குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் போலீஸ் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துவதால் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பெரும் பாதுகாப்பு பிரச்சனை உருவாகும். மேலும், போலீஸ் ஸ்டிக்கரை பயன்படுத்தி மோசடி மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், காவல்துறையினரின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதை அனைத்து பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். அப்படி மீறி போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் தீவிரமாக கண்காணித்து அதில் பயணிப்பவர் யாராக இருந்தாலும் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.