Rock Fort Times
Online News

லோகோ பைலட்டுகள் இளநீர், இருமல் மருந்து சாப்பிட விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் – ரயில்வே நிர்வாகம்!

ரயில்களை இயக்கும் லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்டவற்றை சாப்பிட கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணிக்கு வரும்போது, அவர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறிய, ‘பிரீத் அனலைசர்’ எனப்படும், சுவாச பரிசோதனை கருவி வாயிலாக சோதனை நடத்தப்படுவது வழக்கம். கேரளாவின், திருவனந்தபுரம் ரயில்வே மண்டலத்தில் பணியாற்றும் ரயில் இன்ஜின் டிரைவர்களிடம் சமீப நாட்களாக நடத்தப்பட்ட பிரீத் அனசைலர் சோதனையில், அவர்கள் மது அருந்தியுள்ளதாக முடிவுகள் தெரிவித்தன. அவர்களிடம் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என முடிவு தெரிவித்தது. ஆல்கஹால் அடங்கிய ஹோமியோ மருந்துகளை உட்கொள்வதால் பிரீத் அனலைசர் முடிவு அப்படி வருவதாக சிலர் தெரிவித்தனர். சிலரோ, நாங்கள் பணிக்கு வருவதற்கு முன் பழங்கள் சாப்பிட்டோம், குளிர்பானம் அருந்தினோம் என ஆளுக்கொரு காரணங்களை கூறினர். இது தொடர் கதையானதால் குழம்பிப்போன திருவனந்தபுரம் ரயில்வே மண்டல அதிகாரிகள், அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். ரயில் இன்ஜின் டிரைவர்கள் இனி பணிக்கு வருவதற்கு முன், இளநீர், குளிர்பானங்கள், சில வகை பழங்கள், வாய் புத்துணர்ச்சி திரவம், மற்றும் இருமல் மருந்து உள்ளிட்டவற்றை உட்கொள்ள தடை விதிக்கப்பட்டது. ஒருவேளை உட்கொண்டு இருந்தால் அதை முன்கூட்டியே எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஆல்கஹால் கலந்த மருந்துகள் உட்கொள்பவர்கள், ரயில்வே மருத்துவ அதிகாரியிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு, இன்ஜின் டிரைவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பழுதான பிரீத் அனலைசர் கருவியை மாற்றாமல், நடைமுறைக்கு சாத்தியமில்லாத உத்தரவுகளை பிறப்பிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். இந்தப் பிரச்சனை சர்ச்சையை கிளப்பிய நிலையில், லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்டவற்ற சாப்பிட கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றது. இது, லோகோ பைலட்டுகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்