திருச்சி -திண்டுக்கல் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருமண்டபம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாக்கடை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று ( 12.07.2023 ) கருமண்டபம் பகுதியில் இருந்து தேசிய கல்லூரி வரையிலான நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தினை அளவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புகழேந்தி, அசோக் குமார் மற்றும் சாலை ஆய்வாளர் பாரதி தலைமையிலான நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி எந்திரம் மூலம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடு மற்றும் கடைகள் இடிக்கப்பட்டது. முன்னதாக ஆக்கிரமிப்பினை அகற்ற முயன்ற போது சிலர் ஜேசிபி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தி.மு.க.பிரமுகர் டி.ஆர்.பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் தொடங்கியது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறும்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். எனது வீட்டை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி விட்டார்கள் என்றார்.இதனை அதிகாரிகள் மறுத்தனர். நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தினை சரியாக அளவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்து வருகிறோம். இந்தப் பகுதி வளைவாக இருக்கின்ற காரணத்தால் கூடுதல் இடம் தேவைப்படுகிறது. இங்கு யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தவில்லை. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை மட்டுமே அளவிட்டு எடுத்து வருகின்றோம் என்றனர்.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.